புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி 2013

தனுசு

மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, , பி, பு, பூ, பா, , டே, பே உள்ளவர்களுக்கும்)
சேமிப்பு உயரும் வருடமிது!

வந்த விருந்தினரை வரவேற்பால் திணறடிக்கும் தனுசு ராசி நேயர்களே!

புத்தாண்டு 2013 தனாதிபதி சனி உச்சம் பெற்று பிறக்கிறது. அதுமட்டுமல்ல. ராகுவும் லாப ஸ்தானத்தில் கூடி சஞ்சரிக்கிறது. எனவே, பணப் புழக்கம் அதிகமாகவே இருக்கும்.

முன்கோபக்காரர்கள் என்று உங்களை மக்கள் சொல்வார்கள். காரணம் உங்கள் ராசியின் சின்னம் வில். வில்பாய்வதைப்போல் உங்கள் சொல் பாய்வதால்தான் அந்த பட்டம் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. உங்கள் ராசிநாதனாக குரு விளங்குவதால் இரக்க குணமும் இயல்பாகவே உங்களுக்கு இருக்கும். உபசரிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. உங்கள் ராசிநாதனுக்கு சுக்ரன் பகைவன் என்பதால் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

இந்த புத்தாண்டில் செவ்வாய், சனியின் பார்வை ஏற்படும் நேரத்தில் மட்டும் நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. 5, 12–க்கு அதிபதி செவ்வாய். 2, 3–க்கு அதிபதி சனி. இந்த இடங்களின் ஆதிபத்யத்திற்குரிய கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்கும்பொழுது எண்ணற்ற மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட பார்வை உங்களுக்கு ஏற்படும் பொழுது சுயஜாதகத்தையும் நீங்கள் புரட்டிப்பார்க்க வேண்டும். உங்களுக்குரிய திசாபுத்திகள் உன்னதமானதாக இருந்தால் தங்கு தடைகள் அகலும். தன வரவு அதிகரிக்கும். மங்கள நிகழ்ச்சிகளும் நடைபெறும். குறிப்பாக 5–ல் கேது சஞ்சரிப்பதால் பாம்பு கிரகங்களின் ஆதிக்கம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. பாம்பு கிரகம் இரண்டிற்கும் பரிகாரங்கள் செய்வது அவசியமாகும். அப்பொழுதுதான் பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை மாறும். பிரச்சினைகள் தீரும்.

எண் கணித அடிப்படையில் இந்த ஆண்டு சுக்ரனுக்குரிய ஆண்டாக அமைகிறது. உங்கள் ராசிநாதனோ குரு. எனவே உங்களது பிறந்ததேதிக்கேற்ப பெருமை சேரும் விதத்தில் உங்கள் பெயரை அமைத்துக்கொள்வதோடு, யோக எண் ஆதிக்கத்தில் உங்கள் தொழில் நிலையத்தின் பெயரை அமைத்துக் கொண்டால் தொல்லைகள் அகலும். நன்மைகள் வந்து சேரும்.

இந்த ஆண்டு தொடங்கும் பொழுதே குரு, சுக்ர பார்வை இருக்கிறது. இந்த பார்வை விபரீத ராஜயோக அடிப்படையில் செயல்படப்போகிறது. திட்டமிடாது செய்கிற காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். கட்டளையிடும் பணியாளர்களை மாற்றியமைப்பீர்கள். கல்யாண கனவுகள் திடீரென நிறைவேறும்.

சூரியன், புதன் சேர்க்கையால் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடமாற்றம் உறுதியாகும். ஏமாற்றம் அகலும். கடன் சுமை பாதிக்குமேல் குறைவதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

1.1.2013 முதல் 27.5.2013 வரை
இக்காலத்தில் உங்கள் ராசி 6–ம் இடத்தில் குரு சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல. அது வக்ர இயக்கத்திலும் இருக்கிறது. 1, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ரமாவது யோகம் தான். 6–ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் கடன் சுமை பாதிக்குமேல் குறையும். வாங்கல்கொடுக்கல்களில் இருந்த தகராறுகளை வாய்வார்த்தை மூலமாக பேசி தீர்த்துக்கொள்வீர்கள். அயல்நாட்டு பயணத்தில் ஆர்வம் கூடும். அண்டி இருந்தவர்கள் ஒரு சிலர் உங்களை விட்டு விலகலாம். குருவின் பார்வை உங்கள் ராசியிலும் 2, 10 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது.

எனவே குடும்ப சுமை குறையும். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலும். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவ செலவு குறையும். மகத்தான பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு தொகை வரவில்லையென்று ஏங்குபவர்களுக்கு இப்பொழுது வந்து சேரும்.

தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். ஏதும் வருமானம் வரவில்லையே, என்ன தொழில் செய்தால் லாபம் வரும் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம், ஆதரவுக்கரம் நீட்ட இப்பொழுது அன்னிய இனத்தவர்கள் ஒத்துவருவார்கள். சாதனை நிகழ்த்தும் நேரமாக கூட இதை கருதலாம்.

தக்க விதத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் தீரும். மேல் அதிகாரிகளின் கெடுபிடி மாறும். நாங்கள் வேறு வேலைக்கு செல்கிறோம் என்று சொன்னாலும் இருக்கும் இடத்தில் உங்களை விடமாட்டார்கள். நீங்கள் இங்குதான் வேலை செய்ய வேண்டும். கேட்கும் சம்பளத்தை நாங்கள் தருகிறோம் என்று சொல்லி சம்பள உயர்வு கொடுத்து உங்களை சந்தோஷப்படுத்துவார்கள்.

சனியின் ஆதிக்கம் வலுவாக இருப்பதால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தன ஸ்தானத்திற்கும், சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியான ஒரு கிரகம் உச்சம்பெற்று சஞ்சரிக்கும் பொழுது பணத்தை வைத்துக்கொண்டு எந்த காரியமும் செய்யவேண்டியதில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் காசு, பணம் தானாகவே வந்து சேரும். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும். ஆனந்தம் அளிக்கும்.

28.5.2013 முதல் 31.12.2013 வரை

இக்காலத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். குரு உங்கள் ராசியையே பார்க்கும் உன்னதமான காலம் இது. அதுமட்டுமல்ல. 3, 12 ஆகிய இடங்களை குரு பார்க்கப்போகிறார். முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் 3–ம் இடத்தை குரு பார்த்தாலே போதும். கண்ணேறு படும் விதத்தில் உங்கள் முன்னேற்றங்கள் வந்து சேரும்.

கலை, இலக்கியம், தொழில், அரசியல், சினிமா எதில் அடியெடுத்து வைத்தாலும் வெற்றி பெறுவீர்கள். அந்த துறையிலேயே இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைத்து பாராட்டு விழாக்கள் கிடைக்கும் வாய்ப்பு கைகூடி வரும். பொதுவாக ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகமும் தன்னம்பிக்கையும் உள்ளத்தில் குடிகொள்ளும். மெச்சும்படியான வாழ்க்கை அமையும்.

வழக்குகளில் வெற்றி கிட்டும். வாய்தாக்கள் ஓயும். பழகியவர்கள் ஒரு சிலர் உங்களை விட்டு விலகிச்செல்லலாம். அதற்காக பதற்றப்பட வேண்டாம். புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுப்பர். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ஏற்கனவே வாங்கிப்போட்ட இடத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். புதிய சொத்துகள் வாங்குவதற்கு மூலதனம் வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு பழைய சொத்து விற்பனையின் மூலம் மூலதனம் வந்து சேரும். பயணங்கள் அதிகரிக்கும். அன்னிய தேச அனுகூலம் கிட்டும்.

பூர்வ புண்ணியத்தின் வலிமையால் முன்னோர்கள் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடத்திப்பார்க்க முடியவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்போது திருப்பணி செய்யும் வாய்ப்பு கைகூடி வரும்.

குருவின் வக்ர காலம்
கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு சிலருக்கு நன்மையை செய்யும். ஒரு சிலருக்கு வழிபாட்டின் மூலமே நன்மைகளை கொடுக்கும். தேவைகள் கடைசி நேரத்திலேயே நிறைவேறும். தெளிவான சிந்தனையே உருவாக்கிக்கொள்ள வேண்டும். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறையோசித்து செய்தால் வக்ரகாலத்தில் கூட வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ளலாம்.

1, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக குரு விளங்குவதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கூடும். திடீர் திடீரென உடலில் ஏற்படும் நோய்களின் தாக்குதல்களையும் எதிரிகளின் தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.

எனவே, முறையாக குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதோடு வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து சுண்டல், நைவேத்தியம் செய்வது நல்லது.

செவ்வாய், சனிபார்க்கும் காலம்
இக்காலத்தில் நீங்கள் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. பணம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். கூட்டு முயற்சிகளில் பிரச்சினைகள் ஏற்படும். கொள்கை பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும்.

பங்குதாரர்கள் விலகலாம். பகல், இரவாக பாடுபட்டதற்கேற்ற பலன் பாதியளவே கிடைக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால்தான் மனநிம்மதியோடு வாழ்க்கை நடத்த இயலும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சனி, செவ்வாய்க்குரிய பரிகாரங்களை முறையாக செய்தால் சங்கடங்கள் விலகும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் ஆண்டாக அமையும். எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். வருவாய் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும். எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வருட தொடக்கத்தில் கல்விக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். அரசு வழி ஆதரவோடு உங்கள் கணவர் தொழில் செய்யும் முயற்சிக்கு உத்தரவு கிடைக்கும். மே மாதத்திற்கு மேல் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி தனலாபம் தக்கவிதத்தில் வந்து சேரும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க நினைத்த எண்ணம் பலிக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். 5–ல் கேதுவும், 11–ல் ராகுவும் இருப்பதால் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவதோடு சர்ப்ப பிரீதியும் செய்வது நல்லது. செவ்வாய், சனிபார்வை காலத்தில் அங்காரக சனி பிரீதியை செய்தால் சொத்து பிரச்சினைகள் அகலும். சொந்தபந்தங்களும் வாழ்த்தும்.


Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi