புத்தாண்டு பலன்கள் 2013 -- மகர ராசி


மகரம்
 
உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, , ஜி, ஜீ, ஜே, ஜோ, , கா, கி உள்ளவர்களுக்கும்)

சுப காரிய பேச்சுகள் கைகூடும்

நிதானத்தோடு செயல்பட்டால் நினைத்ததை எல்லாம் அடைய முடியும் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறந்து விட்டது. பொன்னவன் குருவின் பார்வை பதிகிறது. முத்தான சனியும் உச்சம் பெற்றிருக்கிறது. முழு நிலவாம் சந்திரனும் எதிரில் நிற்கிறார். அத்தனைக்கும்  மேலாக செவ்வாய் ஆதிக்கம் செலுத்துகிறது உங்கள் ராசியில். அப்புறமென்ன? செய்யும் செயல்களில் வெற்றி, வையகம் போற்றும் வாழ்க்கை யுடன் இந்த ஆண்டு உங்களுக்கு  புகழையும், பொருளையும் வழங்கப் போகிறது.

மனதளவில் நல்லவர்களாக இருக்கும் நீங்கள் மற்றவர்களால் தான் மாற்றப்படுவீர்கள். பணத்தாசை உங்களுக்கு இல்லையென்றாலும் அப்போதைக்கப்போது தலைதூக்கும். கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நீங்கள். கண்டிப்பும் உங்களிடம் இருக்கும்.

இந்த புத்தாண்டில் உங்கள் ராசியை மே மாதம் வரை குறிபார்க்கிறது. அதன்பிறகு 6–ம் இடத்துக்கு சென்று அங்கிருந்து கொண்டு விரய ஸ்தானத்தையும், சகாய ஸ்தானத்தையும் பார்க்கிறது. கையில் பணம் இருந்தால் தானே நாம் செலவழிக்க முடியும் என்று சொல்வோம். பணத்தை பல வழிகளிலும் வந்து சேர வைக்கும் சகாய ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். அதை உருப்படியான காரியத்திற்கு விரயம் செய்ய வைக்கும் விரய ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார்.

எனவே இந்த ஆண்டு வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பு உருவாகப் போகிறது. அதுமட்டுமல்ல பெண் குழந்தைகளின் சுபச்சடங்கு நிகழ்ச்சிகள், பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள் என்று பல சுப நிகழ்வுகள் நடைபெற்று மனதை மகிழ்விக்கப் போகிறது. சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபடுவதோடு வீட்டில் காலை நேரத்தில் வரும் காகத்திற்கு எள்கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.

இந்த புத்தாண்டில் சனி, செவ்வாயின் பார்வை ஏற்படும் காலத்தில் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. சுகாதிபதியும், ராசிநாதனும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளும் பொழுது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். அழகிய வீடு கட்டும் வாய்ப்பு பாதியிலேயே நிற்கலாம். சீரோடும், சிறப்போடும் இருந்த வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவது கண்டு திகைப்படைவீர்கள். அக் காலத்தில் சனி, செவ்வாய் ஆகியவற்றுக்குரிய பரிகாரங்களையும் தல வழிபாடுகளையும் செய்து கொள்வது நல்லது.

ஆண்டின் தொடக்கத்திலேயே சுக ஸ்தானத்தில் கேது இருக்கிறார். 4–ல் கேது இருப்பது அவ்வளவு நல்லதல்ல. நடைமுறை வாழ்க்கையில் சில பிரச்சினைகளை கொடுக்கலாம். எனவே முறையாக சர்ப்ப சாந்தியை செய்து ராகுகேதுக்களை திருப்திபடுத்துவது நல்லது. யோக பலம்பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் நாக ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது.

எண் கணித அடிப்படையில் இந்த ஆண்டு சுக்ரனுக்குரிய ஆண்டாக கருதப்படுகிறது. சுக்ரன் உங்கள் ராசிநாதன் சனிக்கு நட்பு கிரகம் தான். எனவே உங்கள் பெயரை யோக எண்ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் வருமானமும் சிறப்பாக இருக்கும். வளர்ச்சியும் கூடும்.

1.1.2013 முதல் 27.05.2013 வரை:
இக்காலத்தில் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதோடு உங்கள் ராசிக்கு 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். 12–க்கு அதிபதி வக்ரம் பெற்று பார்த்தாலும் நல்ல பலன்களே உங்களுக்கு நடைபெறும். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் இனி அகலும்.

வாங்கல்கொடுக்கல்கள் ஒழுங்காகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வராத பாக்கிகள் வசூலாகும். வளர்ச்சி வித்திட்டவர்களின் ஒத்துழைப்போடு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கூட இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். கூடுதல் பொறுப்புகளும், பதவிகளும் அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்கும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு வாங்குவர். ஏதோ ஒரு வழியில் பணம் வந்து கடன் சுமை குறையும்.

தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் நீண்ட நாட்களாக கிடைக்கவில்லையே? என்று ஏங்கியவர்கள் இந்த புத்தாண்டில் கிடைத்து மகிழ்ச்சியடைவர். என்ன இருந்தாலும் ராகு, கேது பெயர்ச்சி வரை சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

அர்த்தாஷ்டம கேது வலிமையடைவதால் ஆரோக்கியத்தில் அதிக விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லைகள் உருவாகலாம். இடமாற்றம், ஊர் மாற்றங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களையும் தள்ளி வைப்பதே நல்லது.

குரு, சுக்ர பார்வை இருப்பதால் பெண்வழி பிரச்சினைகள் உருவாகலாம். சகோதரிகளையும், தாயாதி வர்க்கத்தினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகளால் சில விரயங்கள் ஏற்படலாம்.  பத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக நல்ல வருமானம் வந்தாலும் நிம்மதி ஓரளவே கிடைக்கும்.

28.5.2013 முதல் 31.12.2013 வரை
இக்காலத்தில் குரு ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை கொடுக்குமா? என்று நீங்கள் நினைக்கலாம். குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும், பார்க்கும் இடத்துக்கு தான் பலன் அதிகம். எனவே அங்கு இருக்கும் பொழுது மறைமுக எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும். முன்னெச்சரிக்கையாக உடலை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எந்த காரியமும் கடைசி நேரத்திலேயே கைகூடும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

இதுபோன்ற காலங்களில் குரு பிரீதியை முறையாக செய்ய வேண்டும். வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணா மூர்த்திக்கு முல்லைப் பூ மாலை அணிவித்து, மஞ்சள் வஸ்திரம் சாற்றி, சுண்டல் நைவேத்தியம் கொடுத்து வழிபட்டு வந்தால் வந்த துயரங்கள் வாயிலோடு நின்று விடும். வானவர்கரசனான வளம் தரும் குருவை தேனான செந்தமிழால் செவிக்குளிர பாடினால், வாழ்நாளில் நல்ல சம்பவங்களை சந்திக்க நேரிடும். வருங்காலமும் வளமாகவும் அமையும்.

குருவின் வக்ர காலம்
ஒரு சில கிரகங்கள், ஒரு சில நேரங்களில் வக்ர இயக்கத்தில் இருக்கும். வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது அவைகளால் திருப்தியான பலனை செய்ய இயலாது. பணிகள் பாதியிலேயே நின்று போகும். பிணிகளும், தொல்லைகளும் உடலோடு ஒட்டிக் கொள்ளும். துணிந்து எதையும் செய்ய முடியாத விதத்தில் மனம் துவண்டு போகலாம்.

எதிரிகளால் ஏமாற்றம்! எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சூழ்நிலை, அமைதிக்கு பங்கம் தரும் விதத்தில் வரும் செய்திகள், அலைச்சல் அதிகரிப்பு, உழைப்புக்கேற்ற பலன் இன்மை, உற்சாக குறைவு போன்றவைகள் உருவாகும். அவற்றை சீர் செய்து கொள்ள தெய்வ வழிபாடு கை கொடுக்கும்.

சனி, செவ்வாய் பார்வை காலம்
இந்த ஆண்டு 3 முறை மிக நீண்ட நாட்களுக்கு சனியும், செவ்வாயும் பார்த்துக் கொள்கிறார்கள். சனி, செவ்வாய் பார்வை சங்கடங்களை கொடுக்கும் என்பது நியதி. பணிகளில் தொய்வு, பக்கபலமாக இருப்பவர்களை அனுசரித்துச் செல்லாவிட்டால் அதனால் பாதிப்புகள் உருவாகலாம். மீன் செவ்வாயின் சஞ்சாரத்தில் உடன் பிறந்தவர்களோடு போராட்டமும், மேஷ செவ்வாயின் சஞ்சாரத்தின் போது உடல் ஆரோக்கியத்தோடு போராட்டமும் உருவாகலாம்.

போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற அப்போதைக்கப்போது கிரகங்களை திருப்திபடுத்த வழிபாடு செய்ய வேண்டும். எந்த முடிவெடுத்தாலும் பெரியவர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. கணவன்மனைவிக்குள் மூன்றாம் நபரின் தலையீட்டால் ஒற்றுமை குறைவு ஏற்படலாம்.

வீட்டு தகவல்களை வெளியில் சொல்லாமல் இருப்பதன் மூலமும் மற்றவர்களை விமர்சிப்பதை தவிர்ப்பதன் மூலமும் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். கூட்டாளிகள் விலகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். குறிப்பாக அங்காரகனுக்கு சிவப்பு மாலை அணிவித்து, துவரையை தானம் கொடுப்பதோடு, சனிக்கும் எள் தீபம் ஏற்றி வந்தால் சஞ்சலங்கள் தீரும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு மகத்தான ஆண்டு தான் என்றாலும், சுக ஸ்தானத்தில் அல்லவா கேது சஞ்சரிக்கிறார். எனவே மருத்துவ செலவு கூடும். நோய்க்கான அறிகுறி தோன்றும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. சுப விரயங்கள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது ஒற்றுமையை பலப்படுத்தும். வருடத்தின் மையப் பகுதியில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உங்கள் பெயரில் இடம், பூமிகள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

சனி, செவ்வாய் பார்வை காலத்தில் ஆஞ்சநேயர் வழிபாடுகளை செய்வது நல்லது. சுக ஸ்தான கேதுவிற்கு பரிகாரமாக சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறலாம். குடும்ப சுமை கூடும் வருடமிது.

நன்றி 

                                                                           தினத்தந்தி
Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi