கும்பம்
அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின்
முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்
நம்பிக்கைக்குரிய நண்பர்களை
தேர்ந்தெடுத்து நல்லவிதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் கும்பராசி நேயர்களே!
வந்து விட்டது புத்தாண்டு, இனி வாய்ப்புகள் வாயில்கதவை
தட்டப்போகிறது. குருவின் வக்ர இயக்கம் முடிந்த பின்னால் கூடுதல் பலன்
உங்களுக்கு கிடைக்கும்.
வந்த புத்தாண்டில் வளர்ச்சி
கூடிடுமா? மந்தன் சனியால் மகத்துவம் கிடைத்திடுமா? எந்த வழியில்
நமது முன்னேற்றம் வந்து சேரும். அதற்கு ஏதேனும் பரிகாரங்கள்
செய்ய வேண்டுமா? என்றெல்லாம்
சிந்தித்துக்கொண்டிருந்த உங்களுக்கு ராசிநாதன் உச்சம்
பெற்று நல்ல வாய்ப்புகளை கொடுக்கும் விதத்தில் தான்
சஞ்சரிக்கிறார்.
ஆனால் அவரோடு ராகு அல்லவா
கூடியிருக்கிறார். அதுமட்டுமல்ல முன்னேற்ற பாதைக்கு
வித்திடும் 3–ம் இடத்தில் கேதுவும் அல்லவா
சஞ்சரிக்கிறார். எனவே, ஒரு கிரகம் வளர்ச்சியையும், ஒரு கிரகம் தளர்ச்சியையும்
கொடுக்கும் விதத்தில் சஞ்சரிக்கிறார்கள். ஒருவர் கொடுப்பதை
ஒருவர் கெடுப்பது என்பது உலக இயல்பு. அதுபோலத்தான்
கிரகங்களின் சஞ்சாரமும். ராசிநாதன் உச்சம் பெற்று வேண்டிய அளவு
பொருளாதாரத்தை விருத்தி செய்து கொடுக்க முன்வரும்பொழுது ஒரு சில
கிரகங்கள் உறுதுணை புரிந்தாலும், முன்னேற்ற
பாதைக்கு அழைத்துச்செல்லும் முக்கிய
கிரகம் திருப்திகரமாக சஞ்சரிக்காவிட்டால் பயனில்லை அல்லவா? எனவே லாபம் வருவது போல் தோன்றினாலும் அது கடைசி நேரத்தில்
கைநழுவி போகலாம்.
அதற்கு என்ன காரணம்? என்பதை பற்றி சிந்தித்து
பாருங்கள். வருடத்தொடக்கத்திலேயே 6–க்கு அதிபதி
சந்திரன் 6–ம் இடம் எனப்படும் எதிரிகள் ஸ்தானத்தில் சொந்த வீட்டிலேயே சஞ்சரிக்கிறார். எனவே
தனக்குத்தானே எதிரியாகும் சூழ்நிலையும் உருவாகும். எதையும்
மனம்விட்டு பேசாமல் ரகசியமாக வைத்துக்கொண்டு
செயல்படுவதன் மூலம் சில நல்ல பலன்களை காணலாம்.
என்ன இருந்தாலும் சர்ப்ப
பிரீதிகளை செய்துகொள்வதோடு, சனி
பிரீதியையும் செய்து கொள்வது நல்லது.
புத்தாண்டின் கிரக நிலைகளை
விளக்கும் கட்டத்தையும், உங்கள் சுய
ஜாதக கட்டத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். இரண்டின் கிரக
நிலைகளும் ஏற்ற திசாபுத்திகளும் ஒத்து வரும்பட்சத்தில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். இல்லையேல்
வார வழிபாடு, மாத வழிபாடு, வருட வழிபாடு, சிறப்பு வழிபாடு என்று முறையாக வழிபாடுகளை தேர்ந்தெடுத்து செய்தால்
முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க இயலும்.
ஆண்டின் தொடக்கத்தில் குரு வக்ர
இயக்கத்தில் இருந்தபடியே சுக்ரனை பார்க்கிறார்.
எனவே, பணம் வந்த மறுநிமிடமே
செலவாகலாம். பக்குவமாக பேசி காரியங்களை
சாதித்துக்கொண்டாலும், முடிவில் மனஸ்தாபங்களே வந்து
சேரலாம். எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுத்து
செயல்படுவதே நல்லது.
1.1.2013 முதல் 27.5.2013 வரை
இக்காலத்தில் சூரிய, புதனின் சேர்க்கையால் புதஆதித்ய
யோகம் செயல்படுகிறது. எனவே கல்வித் தடைகள் அகலும். கல்யாண
வாய்ப்புகள் குடும்பத்தில் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். ஒரு
சில கிரகங்கள் உலா வரும் நிலையில் மாற்றம் வரும்வரை நீங்கள்
பொறுமையைத்தான் கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக ராசிநாதன் உச்சம்
பெற்றிருப்பதால் பணக்கவலை தீரலாம். பக்கத்தில்
இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கலாம். ஆனால், மனக்கவலை தீருமா? என்பது சந்தேகம்
தான். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ளாமல், பார்த்துக்கொள்வது உங்களின்
புத்திசாலித்தனம். மக்கள் செல்வங்களை
உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளின் முன்னேற்றம்
கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.
விரய ஸ்தானத்தில் செவ்வாய்
உச்சம் பெற்றிருக்கிறார். 3, 10–க்கு அதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் தொழில்
மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். பழைய தொழிலை கொடுத்துவிட்டு புதிய தொழிலை
தொடங்கும் எண்ணம் ஒரு சிலருக்கு மேலோங்கும். இடம், பூமி விற்பனையால் லாபம்
கிடைக்கும். தொழில் நடைபெறும் இடத்தை ஒரு சிலர்
விலைக்கு வாங்கி அழகான கட்டிடமாக மாற்றி அதை ஷாப்பிங்
காம்ப்ளக்சாகவும், கடைகளாகவும் கட்டிவிடும்
வாய்ப்பு உருவாகும்.
9–ம் இடத்தில்
ராகு சஞ்சரிப்பதால் தந்தை வழி சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
சாதுவாக இருந்த சகோதரர்கள் கூட விரோதியாக மாறலாம். எனவே அவர்களை அனுசரித்து சென்று பூர்வீக சொத்துகளில் ஆதாயம் பெற
நினைப்பது புத்திசாலித்தனமாகும்.
வக்ர குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. 8–ம் இடத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். ஒவ்வொரு மருந்தாக
உட்கொண்டு எதுவும் பலன் தரவில்லையே என்று நினைத்தவர்கள், இப்பொழுது பார்க்கும் மாற்று மருத்துவத்தால் பாதிக்குமேல் குணமாகி பணிபுரிவதில்
இருந்த தொய்வு நிலை அகலும்.
தொழில், கூட்டாளிகளில்
சில மாற்றங்களை செய்வீர்கள். செயல்பாடுகளில் தீவிரம்
காட்டாமலும் பதட்டப்படாமலும் செய்தால், எந்த செயலும்
வெற்றிகரமாக முடியும். இது போன்ற காலங்களில் திசாபுத்திக்கேற்ற
தெய்வ வழிபாடு உங்களுக்கு தேவை.
28.5.2013 முதல் 31.12.2013 வரை
இக்காலத்தில் குரு மிதுனத்தில்
சஞ்சரிக்கப்போகிறார். குருவின் பார்வை நேரடியாக
உங்கள் ராசியில் பதிகிறது. அது மட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. ‘குரு பார்க்க
கோடி நன்மை’ என்பதற்கேற்ப வருடத்தின் முற்பாதியை விட, பிற்பாதி
யோகம் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது என்றாலும், இடையிடையில் குருவின் வக்ரமும், குருவின் அஸ்தமனமும், புதனின் அஸ்தமனமும், புதனின் வக்ரமும்
வந்துகொண்டேயிருக்கிறது. எனவே திருப்தியாக பலன்
கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம்.
பதினோறாமிடத்தை குரு
பார்ப்பதால் இளைய சகோதரத்தின் வழியே இணக்கம் ஏற்படும்.
இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு
மகிழும் வாய்ப்புகள் கிட்டும். குழந்தைகளின் கடல்
பயண வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும்.
அரசு வழிச்சலுகைகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு
பொற்காலமாக அமையும். வீடு கட்டுவதற்கும் வாகனம் வாங்குவதற்கும்
கடன்கேட்டு விண்ணப்பித்தவர்கள் நீண்ட நாட்களாக நல்ல தகவல் வரவில்லையே
என்று நினைத்திருக்கலாம். அந்த நிலை இனி மாறும். எதிர்பார்த்த தொகை வந்து சேர்ந்து இனி துரிதமாக வேலைநடைபெறும்.
தந்தை வழியில் இருந்த விரிசல்
மறையும். பங்காளிப்பகை மாறும். தங்களுக்கு கிடைக்க
வேண்டிய பங்குகளை தானாக கொண்டு வந்து சேர்ப்பர். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வைத்திருக்கும் பழைய
வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கி
மகிழ்ச்சி காண்பீர்கள்.
குருவின் வக்ரகாலம்
இக்காலத்தில் எதையும் ஒரு
முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றிருக்கும்
நீங்கள் நாணயப் பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். காரணம்
வாக்குஸ்தானாதிபதியாக குரு விளங்குகிறார்.
அதோடு மட்டுமல்ல லாபஸ்தானாதிபதியாகவும் குரு விளங்குகிறார்.
எனவே எதையும் ஒருமுறைக்கு
பலமுறை யோசித்து சொல்வது நல்லது. கொடுத்த வாக்கை
கடைசிநேரத்தில்தான் காப்பாற்ற இயலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேர்வதில் தாமதம்
ஏற்படலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட
வேண்டிய மாதமிது. தட்சிணாமூர்த்தி வழிபாடு தித்திப்பான வாழ்க்கையை வரவழைத்துக்கொடுக்கும்.
செவ்வாய்–சனி பார்க்கும் காலம்
இக்காலத்தில் குடும்ப ஒற்றுமை
கூடவேண்டுமானால் நீங்கள் விட்டுக்கொடுத்துச்செல்ல
வேண்டும். எந்த செயலையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும்
சூழ்நிலை உருவாகும். கட்டிடப்பணிகள் பாதியிலேயே நிற்கலாம்.
திருமண முயற்சிகளில்
நிதானப்போக்கை கடைபிடிப்பது நல்லது. மீனத்தில் இருந்து செவ்வாய்
பார்க்கும்பொழுது பங்குதாரர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.
எனவே கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. அங்காரக
வழிபாடும், ஆதியந்தப்பிரபு வழிபாடும் நன்மை
தரும்.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
இந்த ஆண்டு நன்மையும், தீமையும் கலந்த ஆண்டாகவே
அமையும். வருடத்தொடக்கத்தில் குருவின் வக்ர இயக்கத்தால்
குடும்பச்சுமைகூடும். கொடுக்கல்–வாங்கல்களில் திருப்தி இருக்காது. சகோதரர்களிடம் கருத்துவேறுபாடுகளும் சஞ்சலங்களும் உருவாகலாம்.
ஆரம்பத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நேரம்.
ஆனால் குரு பெயர்ச்சிக்குப்பின்னால் மகிழ்ச்சி வெள்ளத்தில்
மிதக்கப்போகிறீர்கள்.
உங்கள் ராசியை குரு
பார்க்கப்போவதால் குழப்பங்கள் அகலும். குடியிருக்கும்
வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பாசத்தோடு பழகி நேசிக்கும்
நண்பர்களை கூட்டாக வைத்துக்கொண்டு தொழில் செய்ய வைத்துக்கொள்வர். ராகு–கேதுவின் ஆதிக்கம் 3, 9–ல் உள்ளது.
எனவே பெற்றோர்களின் உறவு திருப்திகரமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
சர்ப்பசாந்தி செய்வதன் மூலமும், சனி, செவ்வாய்
வழிபாட்டின் மூலமும் சகஜநிலைக்கு வர இயலும்.
நன்றி
தினத்தந்தி