புத்தாண்டு பலன்கள் மீன இராசி 2013


மீனம்
பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, , ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்!

உதவும் குணத்தாலும், உழைக்கும் கரத்தாலும் உயர்ந்த நிலையை அடையும் மீன ராசி நேயர்களே!

2–ல் கேது, 8–ல் ராகுவுடன் புத்தாண்டு பிறக்கிறது. இருக்கும் குருவும் வக்ரமாக இருக்கிறது. அஷ்டமத்தில் ராகுவும், சனியும் இணைந்து வேறு சஞ்சரிக்கிறார்கள். ஆனாலும் புத்தாண்டு உங்களுக்கு நன்மையையே வழங்கும். காரணம் கேந்திராதிபத்யதோஷம் பெற்ற கிரகமான குரு வக்ர இயக்கத்தில் இருந்தபடியே ஆண்டு தொடங்குகிறது.

வக்ர குருவின் ஆதிக்கத்தால் வளர்ச்சி கூடும். அதே நேரத்தில் விரயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துசேரும். பொதுவாகவே மீன ராசியில் பிறந்தவர்கள் எதையும் யோசித்துதான் செய்வீர்கள். கழுவிய மீனில் நழுவிய மீனாக விளங்குவீர்கள்.  ஆன்மிக வர்க்கத்தினரையும் அருகில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். அதிகாரம் செய்பவர்களையும் அருகில் வைத்துக்கொண்டிருப்பீர்கள்.

இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த புத்தாண்டு சந்திர பலத்தோடு பிறப்பதால் பாதி வருடங்கள் பண வரவு வந்து கொண்டேயிருக்கும். மீதி வருடத்தில் செலவு நடைகள் கூடுதலாக இருக்கும். ஆதரவுக்கரம் நீட்டுவோரை அனுசரித்து வைத்துக்கொள்ளுங்கள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரவும் பாடுபட்டதற்கு ஏற்றபலன் கிடைக்கவும் இந்த ஆண்டு முழுவதும் வழிபாடுகள் தான் உங்களுக்குத்தேவை.
உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள கட்டத்தையும், புத்தாண்டில் உள்ள கட்டத்தையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அதில் நடக்கும் தெசாபுத்தி, நட்புக்கிரகத்தோடு அனுகூலம் தரும் விதத்தில் இருந்தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடைபெறும். இல்லையேல் நீங்கள் தீட்டிய திட்டங்கள் திசைமாறி செல்லலாம்.

அதுபோன்ற நேரங்களில் எந்த தெய்வத்தை வழிபட்டால், இனிய வாழ்க்கை அமையும் என்பதை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பொதுவாகவே சர்ப்பதோஷத்தின் பிடியில் உங்கள் ஜாதகம் இருக்கிறது. எனவே முறையாக யோகபலம் பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் நட்சத்திரத்தில் அதற்குரிய ஸ்தலத்திற்கும் சென்று சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் ஏற்ற இறக்கம் இல்லாத வாழ்க்கை அமையும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

எண் கணித அடிப்படையில் இந்த ஆண்டு சுக்ரனுக்குரிய ஆண்டாக அமைகிறது. உங்கள் ராசிநாதனோ குரு. இரண்டும் பகைக்கிரகம் என்பதனால் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றவிதத்தில் கிரகங்களை தேர்ந்தெடுத்து அதற்குரிய எண் ஆதிக்கத்தில் தொழில் நிலைய பெயர்களை அமைத்துக்கொண்டால் தொகை வந்து கொண்டே இருக்கும்.

பொதுவாக அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் இருப்பதால் திடீர், திடீரென மாற்றங்களை சந்திப்பீர்கள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனமுடன் செல்வது நல்லது. பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை மாற்றும் எண்ணம் மேலோங்கும். அதுமட்டுமல்ல. இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம் என்று ஏதாவது ஒரு மாற்றத்தை செய்து கொள்ளவும் முன்வருவீர்கள்.

அஷ்டமத்து சனி என்றாலே அருகில் இருப்பவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நேரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 12–க்கு அதிபதி என்பதால் கெடுபலன்களோடு, நற்பலன்களையும் சேர்த்து வழங்குவார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1.1.2013 முதல் 27.5.2013 வரை:
இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வக்ரகுருவின் இயக்கத்தால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். ஏமாற்றங்களை சந்திக்காமல் இருக்க எதிலும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே, திருமண தடைகள் அகலும் என்றாலும் அஷ்டமத்து சனியின் ஆதிக்கமும் குடும்ப ஸ்தானத்தில் கேதுவின் ஆதிக்கமும் இருப்பதால் வந்த வரன்கள் வாயிலோடு நின்று விடும்.

நமக்கு பார்த்த பெண்களுக்கெல்லாம் வேறு இடத்தில் மணம் முடித்து பேசிவிட்டார்களே!, என்று மாப்பிள்ளை வீட்டார் கவலைப்படுவதும், நமக்கு பார்த்த மாப்பிள்ளையெல்லாம் வேறு பெண்ணுக்கு முடிந்துவிட்டதே! என்று பெண் வீட்டார்கள் கவலைப் படுவதும் இக்காலத்தில் ஏற்படலாம். ராகு கொடுக்கும்! கேது கெடுக்கும்! என்று சொல்வர்.

ஆனால் கேதுவை கெடுக்கும்என்று சொல்லக்கூடாது. முறையான சர்ப்பசாந்தியை செய்து விட்டு கேட்டால் கேட்டதை கொடுக்கும்! என்றே சொல்ல வேண்டும். தாமதம் ஏற்பட்டாலும் தங்கம்போல் குணம் பெற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து கொடுக்கும்.

சந்திரமங்களயோகத்தால் குடும்பத்தில் மங்கள ஓசை கேட்க வேண்டிய நேரமிது. அதுமட்டுமல்ல புத்திரஸ்தானத்தில் சந்திரன் சொந்த வீட்டில் சஞ்சரித்து வருடம் தொடங்குவதால் மழலையின் ஓசை கேட்கும் வருடமாக இந்த வருடம் அமையப்போகிறது. எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க வைக்கும் இந்த ஆண்டில் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமைய, முல்லைப்பூ மாலையிட்டு தட்சிணாமூர்த்தியை வழிபடுவதோடு முக்கிய பரிகாரங்களை தசா, புத்தி அடிப்படையிலும் செய்தால் சிறந்த பலன்களை வரவழைத்துக்கொள்ளலாம்.

28.5.2013 முதல் 31.12.2013 வரை
இக்காலத்தில் குரு மிதுனத்தில் சஞ்சரிக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 4–ம் இடமாக அந்த இடம் அமைகிறது. அங்கிருந்து கொண்டு 8, 10, 12 ஆகிய இடங்களை குரு பார்வையிடுகிறார். எனவே, அந்த இடங்கள் புனிதமடைகின்றன. குருபெயர்ச்சிக்கு பின்னால் ஓரளவே நற்பலன்களை நீங்கள் அடைய முடியும். என்ன இருந்தாலும், அஷ்டமத்து சனியும், அஷ்டமத்து ராகுவும் இருப்பதால் முன்னேற்றத்திற்கு சில முட்டுக்கட்டைகள் வந்து கொண்டேயிருக்கும்.

என்ன காரணத்தினால் தொந்தரவுகள் வந்து கொண்டேயிருக்கிறது என்பதை 24 மணி நேரம் ஆராய்ச்சி செய்து கொண்டேயிருப்பீர்கள். ஆராய்ச்சியின் முடிவில் நீங்கள் கண்டறிந்த உண்மை ஆலய வழிபாடுதான் சிறந்தது என்ற முடிவைத்தான் சொல்லப்போகிறீர்கள்.

பார்க்கும் குருவை பலப்படுத்த நல்ல பரிகாரங்களை செய்ய வேண்டும். கேட்கும் தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கிறதே என்று கடன் வாங்கிவிட வேண்டாம். பிறகு கடன்சுமை கூடி கவலைப்படும் சூழ்நிலை உருவாகலாம்.

என்ன இருந்தாலும், அதன் பார்வை பலத்தால் பயணங்கள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகலாம். தொழில் மாற்று சிந்தனை மேலோங்கும். உத்தியோகஸ்தர்கள் பிற மாநிலங்களுக்கு கூட மாற்றப்படலாம்.

குருவின் வக்ர காலம்
மற்ற ராசிக்காரர்களுக்கும், உங்கள் ராசிக்கும் சற்று வேறுபாடு இருக்கிறது. மற்ற ராசிகளுக்கு நற்பலனையே அதிகம் வழங்கும். 1, 10–க்கு அதிபதி என்பதால் உயர்ந்த மனிதர்களின் பட்டியலில் நீங்கள் சேர்ந்து கொள்ள வழி கிடைக்கும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். மின்சாதன பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வேண்டும் அளவிற்கு வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

செவ்வாய், சனிபார்க்கும் காலம்!
இக்காலம்தான் நீங்கள் மனதில் பதித்து வைத்துக்கொண்டு மறக்காமல் செயல்பட வேண்டிய நேரம். 2, 9–க்கு அதிபதியான செவ்வாய் 11, 12–க்கு அதிபதியான சனியை பார்க்கும் நேரத்தில் செலவு நடைகூடும். சேமிப்பு கரையும். பூமி பிரச்சினையும், புதிய நபர்களால் பிரச்சினையும் உருவாகும். ஆமாம்! நாங்கள் இதை முடித்து கொடுக்கிறோம் என்று சொல்லிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர்.

பஞ்சாயத்துகளுக்கு உறவினர்கள் கட்டுப்படமாட்டார்கள். எதிரிகள் துள்ளிக்குதிப்பர். உதிரி வருமானங்கள் குறையலாம். ஊர் மாற்றத்தை உபயோகப்படுத்திக்கொள்ள இயலாத சூழ்நிலை அமையும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களே பகையாக மாறலாம். பிள்ளைகள் வழியிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். ஆதியந்த பிரபு வழிபாடு அமைதியை வழங்கும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
வருட தொடக்கத்தில் குடும்ப சுமைகூடும். உடன் இருப்பவர்களால் சில தொல்லைகளை சந்திக்க நேரிடும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கணவன்மனைவிக்குள் கனிவுகூட விட்டுக்கொடுத்து செல்வதுதான் நல்லது. பக்குவமாக பேச கற்றுக்கொண்டால் சிக்கல்களிலிருந்து விலகலாம். உங்கள் பெயரில் வாங்கிய சொத்துகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பீர்கள்.

வருடத்தின் பிற்பகுதியில் வளர்ச்சி கொஞ்சம் கூடும். குருபார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். நீண்டதூர பயணங்களை சனி பெயர்ச்சி ஆகும் வரை தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றங்கள் வந்து சேரலாம். அங்காரக சனி பிரீதியும், சர்ப்ப சாந்தியும் அவசியம் செய்தால் தங்கு தடையின்றி வாழ்க்கை சக்கரம் சுழலும்.நன்றி 

தினத்தந்தி
Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi