2013 ஆண்டு பலன்கள் மிதுன ராசி நேயர்களே!


மிதுனம்

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, , , கே, கோ உள்ளவர்களுக்கும்)

குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும்!
நல்ல யோசனைகளை எல்லோருக்கும் எடுத்துரைக்கும் மிதுன ராசி நேயர்களே!

மாற்றங்களையும், ஏற்றங்களையும் விரும்பும் உங்களுக்கு புத்தாண்டு ஒரு பொன் கொழிக்கும் ஆண்டாக அமையப் போகிறது. வருட தொடக்கத்திலேயே தனாதிபதி சந்திரன் சொந்த வீட்டிலேயே சஞ்சரிக்கிறார். தனாதிபதி நன்றாக இருந்தால் வாழ்க்கை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் அல்லவா? எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் நீங்கள். சாதுர்யமாக பேசி சச்சரவுகளை தீர்ப்பீர்கள்.  

சகல விஷயங்களையும் நீங்கள் அறிந்திருந்தாலும் அதை மற்றவர்கள் சொல்கின்ற பொழுது தெரியாதது போல கேட்டுக் கொள்வீர்கள். அவர்கள் அத்தனையும் சொல்லி முடித்த பின்னால் எனக்கு இதெல்லாம் முன்பே தெரியும் என்று சொல்வீர்கள்.

வருட தொடக்கத்தில் குரு வக்ர கதியில் இருக்கிறார். சுக்ரன் 6–ல் மறைந்திருக்கிறார். 12–க்கு அதிபதி 6–ல் மறைந்து வக்ர குருவால் பார்க்கப்படும் பொழுது, நீண்ட நாட்களாக நடைபெறாத காரியங்கள் கூட நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

தடைகளை தகர்த்து எறியும் ஆற்றல் சில கிரகங்களுக்கு உண்டு. அங்ஙனம் பார்க்கும் கிரகங்களை நாம் பலப்படுத்த வேண்டுமானால் நாம் பரிகாரங்களை முறையாக செய்ய வேண்டும். செய்யும் பரிகாரங்கள் திருப்திகரமாக அமையும்பட்சத்தில் வையகம் போற்றும் வாழ்க்கை உங்களுக்கு அமையும்.

வருட தொடக்கத்தில் உங்கள் ராசியை கேது பார்க்கிறார். கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதியும் பொழுது சில சமயங்களில் திடீர் பிரச்சினைகளும் வந்து சேரலாம்.  எனவே ராகுகேதுக்களுக்கு பிரீதியாக சர்ப்ப சாந்திகளை வருட தொடக்கத்தில் முதல் இரண்டு மாதங்களுக்குள் செய்து கொள்வது நல்லது.

உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள கட்டங்களையும், புத்தாண்டில் உள்ள கிரக நிலைகளின் கட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வருடம் பிறந்த நாள், வரும் பெரிய கிரகங்களின் மாற்றங்கள் உருவாகும் நாள் ஆகிய நிகழ்ச்சிகளின் போது உங்கள் தெசாபுத்தியை கணக்கிட்டு அதற்குரிய வழிபாடுகளை மேற்கொண்டால் எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும்.

2013–ம் ஆண்டு எண் கணிதப்படி சுக்ரனுக்கு உரிய ஆண்டு. ‘6’ எண் ஆதிக்கத்திற்குரிய ஆண்டாக கருதப்படுகிறது. உங்கள் ராசிநாதன் புதனும், சுக்ரனும் இணைந்து புத, சுக்ர யோகம் அமைந்த ஜாதகத்தை நீங்கள் பெற்றிருந்தால் தொழில் வளர்ச்சியும், தொகை வரவும் அதிகமாக வந்து சேரும்.

இல்லை என்றாலும் சுக்ரன், புதன் இவற்றின் அடிப்படையில் பாதசார பலம் பார்த்து அந்த கிரகத்திற்குரிய எண் ஆதிக்கத்தில் தொழில் நிலையத்தின் பெயரை அமைத்துக் கொண்டால் லாபம் சீராக வந்து கொண்டேயிருக்கும்.

1.1.2013 முதல் 27.5.2013 வரை
வருட தொடக்கத்தில் குரு 12–ம் இடத்தில் சஞ்சரித்து அதன் பார்வை பலத்தால் 4, 6, 8 ஆகிய இடங்களை புனிதப்படுத்துகிறார். எனவே பாயில் படுத்து நோயில் கிடப்பவர்கள் கூட பம்பரமாக பணிபுரிய வாய்ப்புகள் கை கூடி வரலாம். வீடு கட்டும் முயற்சியில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பத்திரப்பதிவுகளில் இருந்த தாமதங்கள் அகலும். புத்திரர்களால் வருமானமும், புதிய உத்யோகங்கள் கிடைப்பதற்கான அறிகுறியும் தோன்றும்.

குறிப்பாக இடமாற்றம், வீடுமாற்றம், தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும். அங்ஙனம்  மாற்றத்தை விரும்புபவர்கள் ஜாதகத்தில் பயண ஸ்தானம் நன்றாக இருந்தால் மாறிக் கொள்ளலாம். இல்லையேல் இருக்கும் இடத்திலேயே இருப்பது நல்லது.

வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கை கூடவில்லையே என்று ஏங்கியவர்கள். இந்த புத்தாண்டில் மகிழ்ச்சியடையும் விதத்தில் அவைகள் கை கூடும். கல்வி தடை அகலும். பலமுறை தேர்வு எழுதியும் வெற்றி பெறவில்லையே என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது ஆர்வத்தோடு தேர்வு எழுதினால் அதில் வெற்றி பெற்று பட்டமும் பெற முடியும். தாயின் உடல்நலம் சீராகும். தாய் வழி ஆதரவோடு சில நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள்.

குரு 12–ல் இருக்கும் வரை நிறைய விரயங்களே உங்களுக்கு காத்திருக்கும். ஆனால் அவை நல்ல விரயங்களாகவே ஏற்படும். பெண்களின் சுப சடங்குகள், பெற்றோர்களின் மணி விழாக்கள் அல்லது குடும்பம் சம்பந்தபட்ட வகையில் முன்னோர்களால்      கட்டப்பட்ட கோவிலுக்கு கூட குட       முழுக்கு விழா நடத்துவதற்கான வாய்ப்புகள் கை கூடிவரும்.

6–க்கு உரிய செவ்வாய் 8–ம் இடத்தில் மறைய அவரை 12–ம் இடத்தில் குரு பார்ப்பதால் கூட்டுதொழிலில் மாற்றம் ஏற்படலாம். கூட்டாளிகள் கோபப்படாமல் பார்த்து கொள்வது நல்லது. பழைய பங்குதாரர்கள் விலகி புதிய பங்குதாரர்கள் சேரலாம். மனைவி அல்லது மக்கள் பெயரில் நீங்களும் கூட்டு சேர்ந்து பழைய தொழிலை புதிய விதத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

28–5–2013 முதல் 31–12–2013 வரை
குரு மிதுனத்தில் சஞ்சரிக்கும் நேரமிது. அதன்பார்வை பதியும் இடமெல்லாம் புனிதம் அடைந்து பலவித நன்மைகளை உங்களுக்கு வழங்கப்போகிறது. குறிப்பாக 5, 7, 9 ஆகிய இடங்களில் குருவின் பார்வை பதிவதால் பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்போடு எல்லா காரியங்களையும் நல்லவிதமாக நடத்தி காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெருமைக்குரிய முன்னோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி வாங்கி போட்ட சொத்துக்களை இப்பொழுது விற்று முடையில்லாமல் செலவழிப்பீர்கள். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

கல்யாணம் ஆகாத காளையருக்கும், கன்னியருக்கும் வாயில் தேடி வரன்கள் வந்து அலைமோதும். வந்த ஜாதகத்தில் எந்த ஜாதகமும் பொருந்தவில்லையே என்று இதுவரை கவலைப்பட்டவர்கள், இப்பொழுது ஒன்று, இரண்டு ஜாதகங்கள் பொருந்தி ஒத்து வருகிறதே பேசி முடித்துக் கொள்ளலாமா என்று சொல்வார்கள். விவாகரத்து பெற்றவர்களுக்கு கூட விருப்பங்கள் நிறைவேறும். வெளிநாட்டு யோகமும் ஒரு சிலருக்கு வந்து சேரலாம்.

கடித அனுகூலம் உண்டு. கூட்டாளிகள் கூடுதல் லாபம் பெற வழி வகுப்பர். சகோதர வர்க்கத்தினர் ஒருசிலர் ஒத்துவராவிட்டாலும், ஒருசிலர் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்து வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவிகள் தானாக தேடி வரும்.

குருவின் வக்ர காலம்!
உங்கள் ராசியை பொறுத்த வரை 7, 10–க்கு அதிபதியாக குரு விளங்குகிறார். அப்படிப்பட்ட ஸ்தானங்களுக்கு அதிபதியாக விங்குபவர் வக்ரம் பெறுவது யோகம் தான். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்லவர்கள் என்று நம்பி சேர்ந்த கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்களே என்ற கவலை மாறப்போகிறது. அவர்கள் உங்களுக்கு தர வேண்டிய பாக்கிகளை தானாகவே கொண்டு வந்து தருவர். பொதுவாக ஆதாயம் அதிகரிக்கும் நேரமிது. அடுத்தவர்கள் நலன்கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

சனி, செவ்வாய் பார்க்கும் காலம்!
ஒரு கிரகத்தை ஒரு கிரகம் பார்க்கும் பொழுதும், ஒரு கிரகம் ஒரு கிரகத்தோடு சேரும் பொழுதும் அதன் தன்மைகள் மாறுபடுகின்றன. மனிதர்கள் எப்படி கூட்டாளிகளால் குணம் மாற்றப்படுகிறார்களோ. அதே போலத்தான் கிரகங்களின் நிலையும். சேர்க்கையினாலும், பார்வையினாலும் ஆச்சரியப்படத்தக்க பலன்களும் நடைபெறும். ஒரு சிலருக்கு அதிக போராட்டங்களையும் உருவாக்கும். அந்த அடிப்படையில் 5–ம் இடத்தில் உள்ள சனியை செவ்வாய் பார்க்கும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நாணயப்பாதிப்புகள் ஏற்படலாம். நல்லவர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். குறைந்த முதலீட்டில் தொடங்கிய தொழில் பெரிய அளவில் வளர்ச்சியடையும் நேரத்தில் பணியாளர்களின் பிரச்சினைகள் உருவாகலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். உடனிருப்பவர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகி கொள்ளலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். கவலைகள் தீர கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக அங்காரகனையும், ஆதியந்த பிரபுவையும் வழிபட்டால் தொல்லைகள் தீரும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு புத்தாண்டில் சுப விரயம் அதிகரிக்கும். புனித பயணங்களை மேற்கொள்வர். வாங்கல்கொடுக்கல்களில் வருடத்தின் முன்பகுதியில் ஏமாற்றங்களை சந்தித்தாலும் பிற்பகுதியில் அதை ஈடுகட்டும் விதத்தில் வருமானம் வந்து சேரும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும்.

குரு பெயர்ச்சிக்கு பின்னால் எண்ணங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருக்கிறதே என்று நினைத்த மங்கள நிகழ்ச்சியில் ஏப்ரல் மாதத்திற்கு மேல் வரிசையாக நடைபெறப்போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், 11–ல் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது அதன்பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. களத்திர ஸ்தானத்திலும் பதிகிறது. அதற்குரிய பரிகாரமாக சர்ப்ப சாந்தியை செய்து கொண்டால் சந்தோஷத்தின் எல்லைக்கு செல்ல முடியும். சனி, செவ்வாய் பார்வை காலத்தில் சனி பிரீதியும், அங்காரக பிரீதியும் செய்தால் சகஜ நிலைக்கு வரமுடியும்.

நன்றி 
தினத்தந்தி
Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi