2013 ஆண்டு பலன்கள் கடகராசி


கடகம்

புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, , டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

ஜூன் மாதத்திற்கு மேல் சொல்லை செயலாக்கலாம்!
அஞ்சாத நெஞ்சமும், எதற்கும் கலங்காத மனமும் கொண்ட கடக ராசி நேயர்களே!
பொது வாழ்வில் அதிக ஆர்வம் காட்டும் உங்களுக்கு, பொன்னான வாய்ப்புகளை வழங்கும் விதத்தில் உங்கள் ராசியிலேயே புத்தாண்டு பிறக்கிறது. சகல யோகங்களும் வரும் விதத்தில் ஆண்டின் தொடக்க நிலை அமைந்தாலும், அர்த்தாஷ்டம சனியும், அர்த்தாஷ்டம ராகுவும் ஒரே நேரத்தில் உங்கள் ராசிக்கு வருகிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.

அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையும், தைரியமும் உங்களுக்கு தானாகவே வந்து இணைந்திருப்பதால் நடப்பது நடக்கட்டும், என்று நம்பிக்கையோடு இருப்பீர்கள். என்ன இருந்தாலும் உங்கள் உள்மனதில் ஒரு ஆதங்கம் இருக்கலாம். வெளி உலகத்தில் வியக்கும் விதத்தில் வாழ்க்கை நடத்தினாலும் உள்ளூர எண்ணற்ற பிரச்சினைகள் உங்கள் மனதிற்குள் பதிந்திருக்கும்.

நீங்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால், சிந்தனை வளம் மிக்கவர்களாக இருப்பீர்கள். சுக்ர பலம் பார்த்து குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், தக்க விதத்தில் குடும்ப உறுப்பினர்கள் நடந்து கொள்வர். பயணங்களில் அதிக பிரியம் வைத்த நீங்கள், பக்குவமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள்.

உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள கட்டங்களையும், இந்த புத்தாண்டில் உள்ள கட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்து, எந்த முடிவையும் எடுப்பது நல்லது.  

பெயரியல் முறையில் எண்கணித அடிப்படையில் 2013–ம் ஆண்டு சுக்ரனுக்குரிய 6 எண் ஆதிக்க ஆண்டாகும். உங்கள் ராசிநாதன் சந்திரனோ 2–ம் எண்ணிற்கு அதிபதி. சுக்ரன், சந்திரன் இரண்டின் ஆதிக்கமும் பாதசார அடிப்படையில் பார்த்து புதிதாக தொடங்கும் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், வருமானம் திருப்திகரமாக வந்து சேரும்.

குரு இந்த ஆண்டு தொடக்கத்தில் வக்ரம் பெறுகிறார். 6, 9–க்கு அதிபதியானவர் 11–ல் வக்ரம் பெற்று, 10–க்குடைய செவ்வாயை பார்க்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோக அடிப்படையில் கிரகங்கள் செயல்பட போகின்றன. போட்டி, பொறாமைகள் அகலும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். தகராறுகள் தானாக அகலும்.

மூடிய தொழிலை இனி திறக்க முற்படுவீர்கள். முன்நின்று சில நல்ல காரியங்களை செய்ய போகிறீர்கள். வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்பால் மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். ஓய்வில்லாமல் உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் வருடத்தின் பிற்பாதியில் கிடைக்கும். என்ன இருந்தாலும் 4–ல் சனி பலம் பெற்று சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது.

ஏதேனும் உடலுக்கு தொல்லைகள் வந்தால் மருத்துவ ஆலோசனைகளை உடனடியாக பெறுவது நல்லது. அலைச்சலை குறைத்துக் கொண்டு ஆகாரத்தில் கட்டுப்பாட்டை செலுத்தினால் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள இயலும்.

1–1–2013 முதல் 27–5–2013 வரை
இக்காலத்தில் லாப ஸ்தானத்தில் குரு வக்ரம் பெறுகிறார். 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ரம் பெறும் பொழுது அடகு வைத்த நகைகளை மீட்டு கொண்டு வருவீர்கள். அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். தொழில் முன்னேற்றம் கருதி, இடமாற்றம் செய்யும் எண்ணத்தை செயல்படுத்துவீர்கள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் விழாக்களுக்கு உதவி செய்வதோடு, முன்நின்றும் நடத்துவீர்கள்.

சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டால் சஞ்சலங்களும் தீரும். சந்தோஷங்களும் சேரும். பணியாளர்கள் சிலரை மாற்றுவீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலகினாலும், புதியவர்கள் வந்திணைந்து உங்கள் பொருள் வளம் பெருக வழிவகுப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் முழுக்கவனத்தை செலுத்துவீர்கள். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். வங்கிகளின் ஒத்துழைப்போடு வாகனங்கள் வாங்குவதிலும் ஒரு சிலர் கவனம் செலுத்துவர்.

சுக ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை இருப்பதால் ஓய்வில்லாத உழைப்பு இருக்கும். நிம்மதியாக சாப்பிடக்கூட முடியவில்லையே, தொலைபேசி அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்வீர்கள். சம்மதித்து ஒப்பந்தங்களில் கையெழுத்துபோட்டு விட்டு, தான் அதிலிருந்து விலகிக் கொள்வதாக பங்குதாரர்கள் சொல்லும் சூழ்நிலையும் உருவாகும். என்றைக்கோ வாங்கிய இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.

புத ஆதித்ய யோகத்தால் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் மாற்றம் ஏற்பட்டு சம்பளம் கூடுகிறது என்ற தித்திப்பான செய்தியும் வந்து சேரலாம். வாரிசு இல்லாத குடும்பங்களில் வாரிசு தோன்ற வழிபிறக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் அதிக நன்மை ஏற்படும் நேரமிது. குடும்பத்தினர்களை கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேசினால் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.  

5, 10–க்குடைய செவ்வாய் 7–ம் இடத்தில் இருந்து கொண்டு உங்கள் ராசியை பார்க்கிறார். எனவே சந்திர மங்கள யோகம் உருவாகிறது. மேலும் குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த திருமண வாய்ப்புகள் கைக்கூடி வரும். சுக ஸ்தான ராகுவால் சுகங்கள் கிடைக்கவும், செயல் ஸ்தான கேதுவால் ஜெயம் உண்டாகவும் ராகு, கேதுக்களுக்கு முறையான சர்ப்ப சாந்தியை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.

28–5–2013 முதல் 31–12–2013 வரை
குரு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் நேரமிது. அதன்பார்வை உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவாகிறது. 4–ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு பெருகும். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். வாய்வழியாக இதுவரை சொல்லியதை எல்லாம் வரலாற்று பொன்னேட்டில் பதித்து வைப்பீர்கள். அர்த்தாஷ்டம சனி, அர்த்தாஷ்டம ராகுவின் ஆதிக்கத்தில் இனி கொஞ்சம் நல்ல வாய்ப்புகள் எட்டி பார்க்கும். காரணம் குருவின் பார்வை அதன் மீது பதிகிறது. கல்யாண கனவு நனவாகும். களத்திரத்தோடு இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இனி வாரிசுகள் பிறக்கும். உற்சாகத்தோடு பணிபுரிய வைப்பதற்கும், உன்னத நிலையை அடைவதற்கும் குருவின் பார்வை உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். அருள்தரும் குருவின் பார்வையை பலப்படுத்த ஆதரவு கரம் நீட்டும் ஆலயத்தை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

தந்தை வழியில் தகுந்த ஆதாயம் கிட்டும். மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை தன்னிடம் காட்டவில்லையே என்ற ஆதங்கம் மாறும். கொட்டமடித்தவர்கள் இனி விலகுவர். குணமறிந்து சகோதரர்கள் நடந்து கொள்வர். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும். தெய்வீக சிந்தனை மேலோங்கும்.
குருவின் வக்ர காலம்!
உங்கள் ராசியை பொறுத்தவரை குரு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும். 6–க்கு அதிபதி என்பதால் வக்ர இயக்கம் நன்மையை கொடுக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். ரண சிகிச்சையின்றி உடல் நலம் சீராகும். கடிதம் கனிந்த தகவலை கொடுக்கும்.

9–க்கு அதிபதியாக குரு விளங்குவதால் வக்ர காலத்தில் தந்தை வழி விரோதங்கள் உருவாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் மேலும் விரிவடையும். பங்குதாரர்கள் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்வார்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வது நல்லது. விடாமுயற்சியால் வெற்றி கிட்டும் நேரமிது. வியாழன் தோறும் குருவிற்கு உரிய வழிபாடும், புனர்பூச நாளில் சிறப்பு வழிபாடும் செய்வது நல்லது.

சனி செவ்வாய் பார்க்கும் காலம்!
ஒரு கிரகத்தை மற்றொரு கிரகம் பார்க்கும் பொழுது நட்பு கிரகமாக இருந்தால் நன்மைகள் கிடைக்கும். பகை கிரகமாக இருந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அதே போன்ற நிகழ்வு உங்களுக்கு சுக ஸ்தானத்தில் ஏற்படுகிறது. 4–ல் சஞ்சரிக்கும் சனியை செவ்வாய் 3 முறை பார்க்கிறார்.

எனவே பார்க்கும் பொழுதெல்லாம் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். ஆதாயம் குறையலாம். அதிர்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரலாம். சொத்து பிரச்சினை தலை தூக்கலாம். சனி செவ்வாய்க்குரிய சிறப்பு பரிகாரங்களை செய்வதோடு எதையும் யோசித்து செய்தால் சிக்கல்களிலிருந்து தப்பிக்க இயலும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
இந்த ஆண்டு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்டாக அமைய போகிறது. எனவே உடம்பை பேணி பாதுகாத்துக் கொண்டு உற்சாகத்துடன் செயல்படுவது அவசி யம். கோபத்தை குறைத்து கொண்டு, குணநலனில்  அன்பு, அடக்கம், அமைதி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் குடும்பத்தில் உள்ளவர்களும் பாராட்டுவர். உங்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். குடும்ப சுமை கூடும் இந்த ஆண்டில் கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்பட விட்டு கொடுத்து செல்வது நல்லது.

பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாக£மல் இருக்க உங்களின் மேற்பார்வை தேவை. சுபகாரியங்களை உடனுக்குடன் பேசி முடிப்பது நல்லது. 4–ல் ராகு இருப்பதால் முறையான சர்ப்ப சாந்தியை உங்களுக்கு அனுகூலம் தரும் கோவிலில் சுயஜாதக அடிப்படையில் செய்ய வேண்டும். அங்காரக வழிபாடும், சனிஸ்வர வழிபாடும் ஆனந்தம் வழங்கும்.


நன்றி 
தினத்தந்தி

Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi