புத்தாண்டு பலன்கள் கன்னி இராசி 2013


கன்னி 
உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, , , , பே, போ உள்ளவர்களுக்கும்)

இடமாற்றம் இனிய மாற்றம் தரும்
இனிமையாக பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறக்கப் போகிறது, புதிய திருப்பங்கள் வரப் போகிறது. முத்தான வாழ்வில் முழு மதியை மறைத்த மேகங்களை போல எத்தனையோ துன்பங்கள் உங்களை வந்து ஆட்கொண்டிருக்கலாம். அத்தனை துயரங்களும் இனி விலகி அனைவரும் போற்றும் விதத்தில் இனி வாழ்க்கை அமையப் போகிறது.

அஷ்டமத்தில் கேதுவும், பத்தாமிடத்தில் அடியெடுத்து வைக்கப்போகும் குருவும், பதவி மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றம் போன்றவற்றை வழங்கும் விதத்தில் கிரக நிலை இருக்கிறது.

வாக்கு ஸ்தானாதிபதியாக சுக்ரன் உங்களுக்கு விளங்குவதால் கவர்ச்சியாகவும், கனிவாகவும் பேசக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. பொறுமையை கடைபிடித்து பெருமையை காண்பவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள்.  

ஆண்டின் தொடக்கத்திலேயே தன ஸ்தானத்தில் ராகுவும், சனியும் சஞ்சரிக்கிறார்கள். எனவே உங்களுக்கு வேண்டிய அளவு பணத்தை வாரி வழங்குவார். இருப்பினும் அஷ்டமத்தில் கேது அடியெடுத்து வைத்திருப்பதால் அதிகப்படியான செலவுகளை செய்ய நேரிடும்.

நீங்கள் மனதில் பதித்து வைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நேரம். சனி, செவ்வாயின் பார்வை காலம் தான். குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனியை செவ்வாய் பார்க்கும் போது, குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் குடும்ப பெரியவர்களை கலந்து ஆலோசித்து செய்வது நன்மையை தரும்.

எந்த ஆண்டு புதிதாக பிறந்தாலும் பிறக்கும் போது அதற்கென்று ஒரு ஜாதகம் அமையும். அந்த ஆண்டின் தொடக்க நாள் ஜாதகத்தையும் நமது சுய ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நமது ராசிக்கும், நமது லக்னத்துக்கும் புத்தாண்டில் உலா வரும் கிரகங்கள் எந்தெந்த இடத்துக்கெல்லாம் செல்கிறது. அதனால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு செயல்பட்டால் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.

எண் கணித அடிப்படையிலும் இந்த ஆண்டு சுக்ரனுக்குரிய ஆண்டு என்பதால் உங்கள் ராசிநாதனான புதன் நட்பு கிரகம் தான். எனவே அதற்கேற்ற விதத்தில் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால் லாபம் இருமடங்காக வந்து சேரும்.
வருட தொடக்கத்தில் புத ஆதித்ய யோகம் செயல்படுவதால் கல்வி, கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விருதுகள் பெறுவதோடு, வியக்கும் விதத்தில் வாய்ப்புகள் வந்து சேரும். மாமன் வழி ஆதரவோடு மகிழ்ச்சி காண்பர். அரசியல் பதவிகளில் இருப்பவர்களுக்கு அதிக பொறுப்புகள் வந்து சேரும்.

ஏழரை சனியின் ஆதிக்கமும் இருப்பதால் 2–வது சுற்று நடப்பவர்கள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காண்பர். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும்.
சர்ப்ப தோஷத்தின் பிடியில் உங்கள் ராசி இந்த ஆண்டு அமைந்து இருக்கிறது. 2–ல் ராகு, 8–ல் கேது என்பதால் அதற்குரிய பரிகாரம் சர்ப்ப சாந்தியை முறையாக செய்ய வேண்டும்.

1.1.2013 முதல் 27.5.2013 வரை
இக்காலத்தில் உங்கள் ராசிக்கு குரு 9–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதுவும் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகிறது. 4, 7–க்கு அதிபதியான குரு வக்ரம் பெற்று பார்க்கும் போது அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். சிக்கனத்தை கடைபிடித்த நீங்கள் செலவுக்கும் அஞ்சமாட்டீர்கள்.

பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். படிப்பில் இருந்த தடை அகலும். தக்க தருணத்தில் நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். தலைப்பிள்ளையின் திருமணத்தை ஜாம்’ ‘ஜாம்என்று நடத்தி முடிப்பீர்கள். லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரித்து ஆண்டு தொடங்குகிறது. எனவே, சென்ற ஆண்டு ஸ்தம்பித்து நின்ற தொழில் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறும்.

மூடிய கதவுகள் திறக்கப்படும். முன்னேற்ற பாதைகள் வந்து சேரும். கோடீஸ்வரர் ஒருவரின் உதவியால் உங்கள் குடும்ப பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். தேடிய சொத்துக்களை விற்பதும், அதில் வரும் லாபத்தை கொண்டு புதிய சொத்துகள் வாங்குவதும் வாடிக்கையாக போகும். வசதிகள் பெருகும்.

ஜென்ம சனியின் ஆதிக்கத்தில் எத்தனை சிக்கல்கள் இருந்ததோ அவை விலகத் தொடங்கும். நன்மைகளை வரவழைத்துக் கொடுக்க நண்பர்கள் முன் வருவார்கள். சென்ற ஆண்டில் பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடர்வீர்கள்.

குரு சுக்ர பார்வையால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பஞ்சாயத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை வழியே வரவு வந்து சேரும். தாயின் நலம் சீராகும். தந்தையின் உறவு திருப்திகரமாக இருக்கும்.

வாகன பழுதுகள் அதிகரிக்கின்றதே என்ற கவலை இனி அகலும். சென்ற ஆண்டு நிறைய வாகன பழுதுகள் வந்திருக்கலாம். இந்த ஆண்டு அதை கொடுத்து விட்டு புதிய வாகனங்
கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர் கள். சில சந்தர்ப்பங்களில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவைப்படும். உத்தியோகத்தில் உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும் என்றாலும் நீண்ட தூரத்துக்கு மாற்றலாகி போகும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும்.

28.5.2013 முதல் 31.12.2013 வரை
குரு மிதுன ராசியில் சஞ்சரிக்கும் நேரமிது. அதன் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகும் நேரமிது. எனவே, அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து புதிய திருப்பங்களை கொடுக்கப் போகிறது. குடும்பத்தை பொறுத்தவரை நீண்ட காலமாக இருந்த சண்டை, சச்சரவுகள் இப்போது மாறும். நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வெற்றி தரும்.

குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவது யோகம் தான். விவாக தடை அகலும். விரிந்த மனம் பெற்றவர்களின் உறவு கிட்டும். கை கொடுத்து உதவ இதுவரை இருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். விருப்பங்கள் ஒவ்வொன்றும் நிறைவேறி திருப்பங்களை உருவாக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப சுமை கூடும். பொல்லாதவர்கள் என்ற பெயர் மாறும்.

4–ம் இடத்தை பார்க்கும் குருவால் நன்மைகள் ஏராளம் நடைபெறும். வேண்டிய அளவிற்கு நூதன பொருட் களை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். வியக்கும் விதத்தில் சொத்து விற்பனையால் லாபமும் கிடைக்கும். உத்தியோக ஸ்தானத்தை பார்க்கும் குருவால் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

உங்களுக்கு இடையூறாக இருந்த மேல் அதிகாரிகள் மாற்றப்படுவர். உங்கள் நலத்தை விரும்பும் அதிகாரிகள் மேல் அதிகாரிகளாக வந்து சேருவர். கடன் சுமை குறையும்.

குருவின் வக்ர காலம்
குரு உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். அதன் வக்ர காலம் உன்னதமான காலம். ஏனென்றால் கேந்திராதிபதி தோஷம் பெற்ற கிரகம் யோகம் செய்யும் நேரமே வக்ர இயக்க காலம் தான்.

எனவே இடம் பூமியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். எளிதில் வெற்றி பெற நட்பு வட்டம் கை கொடுத்து உதவும். கல்யாண கனவுகள் நனவாகும். வெளிநாட்டு முயற்சிகளும் வெற்றி தரும். வீடு மாற்ற சிந்தனைகளும், நாடு மாற்ற சிந்தனைகளும் படிப்படியாக நடைபெறும். வங்கி சேமிப்பு உயரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் மேலும் உதவி செய்ய காத்திருப்பர்.

சனி, செவ்வாய் பார்க்கும் காலம்
பார்க்கும் கிரகங்கள் பக்கபலமாக இருந்தால் வாய்ப்புகள் வாயில் கதவை தட்டிக் கொண்டே இருக்கும். உங்கள் ராசியை பொறுத்தவரை வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படுகிற இடத்தில் சஞ்சரிக்கும் சனியை அல்லவா செவ்வாய் பார்க்கிறார்.

எனவே கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியுமா? என்பது சந்தேகம் தான். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

வீட்டு ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதன் மூலம் வேதனைகளும், சோதனைகளும் தான் வந்து சேரும். எனவே விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. பணநெருக்கடி அதிகரிக்கும். நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் போது சனிக்கும் அங்காரகனுக்கும் பிரீதி செய்து எள்ளும், துவரையும் தானம் கொடுத்து வழிபட்டு வருவது நல்லது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றாலும், ஆரோக்கியத்துக்காக அதிக தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். காரணம், அஷ்டமத்தில் கேது, 2–ல் ராகு அல்லவா சஞ்சரிக்கிறார்கள். முறையாக சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வதால் தடைகள் அகலும். ஆண்டின் முற்பகுதியில் வரவு திருப்தி தரும். என்றாலும், அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் தான் ஆதாயங்களைப்பெற இயலும்.

உருகும் மெழுகு போல் உங்கள் வாழ்க்கை அமையாமல் உரைத்து தேய்த்தால் மணக்கும் சந்தனம் போல் உங்கள் வாழ்க்கை மணம் பரப்ப மற்றவர்களிடம் அன்பு செலுத்துங்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.  குரு பெயர்ச்சிக்கு பின்னால் குழந்தைகளை பற்றிய கவலை அகலும். கல்யாண வாய்ப்புகள் கை கூடி வரும். சனி, செவ்வாய் காலத்தில் வாரம் தோறும் நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
நன்றி 
தினத்தந்தி 
Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi