யாகத்தில் வந்த கண்ணன் !


        டந்த ஞாயிற்று கிழமை அதாவது 17/02/2013 அன்று நமது ஸ்ரீ நாராயணா மிஷன் ஆசிரம பிராத்தனை மண்டபத்தில் உஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவற்காவும் பொதுமக்களுக்காகவும் பத்துவகையான சிறப்பு ஹோமங்கள் இறைவன் அருளால் நல்ல விதத்தில் நடந்தேறியது. ஐந்நூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் நேரில் கலந்து கொண்டார்கள் பலநூறு பேர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து நேரில் வர இயலாத நிலையில் தங்களது குடும்பத்தார் பெயரில் சங்கல்ப்பம் செய்வதன் மூலமாகவும் கலந்து கொண்டார்கள்.  அதில் கலந்து கொண்டு பல பணிகளை முன்னின்று செய்த யோகி ஸ்ரீ ராமானந்த குருஜியின் முதன்மை சீடர்களில் ஒருவரான பேராசிரியர் ஆர்.வி.வெங்கட்ரமணன் தனக்கே உரிய இயல்பான பாணியில் நடந்த யாகத்தை பற்றி எழுதிய சிறப்பு கட்டுரை இன்றைய பதிவு.

மனிதப்பிறவி எடுத்த இந்த ஜென்மம், இன்னிக்கி இதோ இங்கே இருக்கு. ஆனா என்னை இந்த உலகத்துக்குக் அனுப்பிவைத்த தெய்வத்தை நான் நேர்ல பாத்ததில்லை. நானும் இன்னிக்கி நல்லா இருக்கறதுக்கும் நல்லவன்னு பேரெடுத்ததுக்கும் எல்லாரும் மதிக்கிற மாதிரியான வாழ்க்கையை இனிதே வாழ்றதுக்கும் மூலமா, முக்கியமா,ஆதாரமா, அஸ்திவாரமா இருந்த, இருக்கிற, இருக்கபோகிற என் கண்கண்ட தெய்வம் கிருஷ்ணர்  கோவில்ல 17-02-13 அன்னிக்கி உலக மக்கள் நன்மைக்காக யாகம் நடந்தது.


கருணை, வாஞ்சை, தானம், அன்பு, கோபம், விடாப்பிடி,துணிச்சல், அனுசரித்தல், ஆளுமைத் திறன்னு, சகல குணங்களுக்கும் எல்லோருக்கும் அவசியம்னு உணர்த்திய உத்தம புருஷன் முன்னாடி நேத்திக்கு சகல தேவதைகளும் அக்னி சாட்சியா காட்சி தந்தாங்க. ஷேமம், வீரம், வெற்றி, பரிபூரணஆயுள், ஐஸ்வர்யம் எல்லாருக்கும் கிடைக்கணும் னு ஆசீர்வாதம் பண்ணாங்க.

கிருஷ்ணா இன்னிக்கு உன்முன்னாடி எவ்வளவோ பேரு வந்தாங்க அவுங்கள எல்லாரையும் பார்த்தியா?புரோகிதர் சொன்ன மந்திர ஜபங்கள் உன் காதுக்குக் கேட்டுச்சா? யாக குண்டத்தில் கொடுத்த  காணிக்கைகளை சுவீகரித்துக் குளிர்ந்து, தாகம் தணிந்து, சர்க்கரை பொங்கல்,அவல்பொரியில் பசி போய், சந்தனம் துளசியின்  நறுமணத்தை உள்வாங்கி, திரும்பிய பக்கமெல்லாம் தீபமாக எழுந்து ‘இது நிறைவு... இதுபோதும்’னு மனசு பூரிச்சுப் போனியா? 

எல்லோருடைய பிரார்த்தனைகளையும் காதால் கேட்டு  ‘என்னால் உருவாக்கப்பட்ட குழந்தைகள் நன்னாருக்கணும்’னு வாஞ்சையோடு ஆசீர்வாதம் பண்ணினியா? ‘நேர்ல வந்தவங்க, நேர்ல வரமுடியாம முன்னாடியே தகவல் சொல்லி உன் முன்னாடி சங்கல்பம் பண்ண சொன்னவங்கனு இருக்கிற சிலருடைய கஷ்டமான என் வயது முப்பதை தொடுகிறது வீட்டுக்கு வந்து பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று நூறு குடும்பமாவது டிபன் காபி சாப்பிட்டுவிட்டு போயிருப்பார்கள் அவுங்களுக்கு சமையல் செய்து களைப்படைந்தே எங்கம்மாவுக்கு மூட்டு வலி வந்துவிட்டது ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு மணவாழ்க்கை உண்டா? என் கரம்பிடிக்க மணமகன் ஒருவன் பிறந்திருக்கிறானா? என்று புலம்புவதும்,


நிலத்தை விற்று என் அப்பா என்னை படிக்க வைத்தார் உழைத்து சம்பாதித்து அவரை உயரத்தில் வைத்து கெளரவ படுத்துவேன் என்று கனவு கண்ட அவர் மூன்று வேளை உண்பதை கூட நிறுத்தி வைத்து இரண்டு வேளை உண்டு என் கை செலவுக்கு காசு கொடுத்த அவர் கனவில் மட்டுமே சுகம் கண்ட அந்த முதியவருக்கு நிஜத்தில் என்னால் ஆறுதலாக அறை வயிற்றுக்கு சோறு கூட போட முடியவில்லை. படித்து வருடங்கள் உருண்டோடியதே தவிர வேலை இன்னும் கிடைக்கவில்லை என்பவனின் ஏக்க மொழிகள் இன்னொரு காதில் ஈட்டியாக வந்ததும்,

கல்யாணம் முடிந்தது மகிழ்வோடு மணவாழ்வில் அடியெடுத்து வைத்தோம் ஆண்டுகள் பத்து ஆச்சு அம்மா என்று கூப்பிட ஒரு பிள்ளை இல்லை தெருவில் போகும் பொம்மை வியாபாரியிடம் அதை வாங்கி கொடு என்று அடம்பிடித்து அழுவதற்கு ஒரு குழந்தை பிறக்காதா? என் குலபெருமை வளராதா என்று அனுதினமும் அறுபது நாழிகையும் ஆண்டவன் முன்னால் மண்டியிட்டு அழுகிறேன் அழுது அழுது புலம்புகிறேன். வேண்டாமென்று குப்பை தொட்டியில் குழந்தையை தூக்கி போடுபவகளுக்கெல்லாம் கூட குழந்தை பிறக்கிறது ஒரே ஒரு குழந்தை பிறக்காதா என்று தவியாய் தவிப்பவருக்கு இறைவன் அனுக்கிரகம் காட்ட மாட்டேன் என்கிறானே என் குறையை தீர்பதற்கு என் கவலை போக்குவதற்கு ஒரு முயற்சி செய்ய கூடாதா? என்று ஒரு அன்னை அழுவது நம் அடிவயிற்றை பிசைகிறது.


முப்பது வருடமாக உழைத்து உழைத்து முக்கால் பணம் கூட மிஞ்சவில்லை திரும்பும் திசையெல்லாம் கடன்காரர்களின் முகம் மட்டுமே தெரிகிறது. ஆசை மனைவிக்கு அரைமுழ பூ வாங்கி கொடுத்தால் கூட கடனடைக்க துப்பில்லாத உனக்கு பெண்டாட்டி ஒரு கேடா?என்று வட்டிக்கு கொடுத்த்தவன் மானத்தை போக்கும் அளவிற்கு கேள்வி கேட்கிறான் பசியால் அழுகின்ற மகளுக்கு கூட பால் வாங்கி கொடுக்க வழி இல்லை உடலை வருத்தி எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவும் உழைத்து விட்டேன் எந்த பயனும் இல்லை எனக்கு விமோசனம் கிடையாதா? ஒரு நாள் ஒரே ஒருநாள் மட்டுமாவது நிம்மதியாக உறங்க முடியாதா? என்பவரின் நியாயமான வருத்தமும் நமது செவியிலிருந்து தப்பவில்லை

இப்படி எத்தனையோ பிரச்சனைகளை மானசீகமாவோ உன் முன்னாடி கண்ணீர்விட்டு அழுத குழந்தைகளும் சந்தோஷமா, ஆரோக்கியமா  இருக்கணும். ஊரும் உறவும் க்ஷேமமா இருக்கணும்’னு ஆசீர்வாதம் செஞ்சியா?

இந்த ஹோமத்தை முடிச்சிட்டு அங்க கூடியிருந்த தம்பதிகளுக்கு வஸ்திரதானம், அன்னதானம்  செய்துட்டு  கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு  கிளம்பும் போது, மனசு நிரம்பிபோச்சு. அது உன்னால... உன் பாசத்தால!


அதேபோல டூவீலர் கொஞ்சமும் கனமாயிருச்சு. காரணம் நீயே அங்க இன்னும் கொஞ்சம் பேரு பசியாயிருக்காங்கனு உணர்தனுதது மாதிரி கொஞ்சம் மிச்சமிருந்த சாப்பாட்டு பொட்டலங்கள பக்கத்தில இருந்த ஊனமுற்றோர் ஸ்கூல்ல குடுத்துட்டு  வண்டிய எடுத்தா யாரோ பின்னால உக்கார்ந்தது போல உணர்வு. அதுவும் உன்னாலயா கிருஷ்ணா? சாப்பாட்டை குடுத்துட்டு வரும்போது சந்தானம் சார் வண்டி சின்ன விபத்தை சந்திச்சுது அப்போ சாமி போ போ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு போ யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே  சாமி எல்லா திரிஷ்டியும் கழிஞ்சு போச்சுன்னு நினைச்சுக்கோன்னு  ஒருத்தர் சொல்லி போய்கிட்டே இருந்தார். ஒட்டுமொத்த நிகழ்வின் திரிஷ்டியையும் ஒரு சின்ன சம்பவத்தின் மூலமா அப்புறப்படுத்த உன்னை தவிர வேற யாரால முடியும் கிருஷ்ணா!!!

என் கூடவே இரு. காற்றா, வெட்டவெளியா, நறுமணமா,சந்தோஷமா, வெற்றியா, நிறைவா, நிம்மதியா... சூட்சுமமா எப்பவும் என் கூடவே இரு கிருஷ்ணா!

எத்தனையோ மகான்கள் இந்த புண்ணிய பூமியில் அத்துணை பேருக்கும் வந்தனம்.

 பேராசிரியர் 
                     ஆர்.வி.வெங்கட்டரமணன்.

Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi